காதல் கணவர், குழந்தையை கொலை செய்தது ஏன்? கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
ஆற்காடு அருகே பிணங்களை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், குழந்தையை கொன்றது ஏன்? என்பது பற்றி கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆற்காடு,
வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா மந்தைவெளி சந்து தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தீபிகா (20). இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு வயதில் பிரவீன் என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13–ந் தேதி முதல் காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தீபிகா புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் தீபிகாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார். இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12–ந் தேதி இரவு கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகியோரை தலையில் கற்களை கொண்டு தாக்கினேன். பின்னர் தலையணையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.
பின்னர் இருவரின் பிணத்தையும் வீட்டின் அருகே சிறிய அளவில் பள்ளம் தோண்டி புதைத்து. அதன் மேல் விறகுகளை அடுக்கி வைத்து மறைத்து விட்டேன். மேலும் அவர்களை கொலை செய்யும் போது ஏற்பட்ட ரத்தக்கறைகளை துணிகளால் துடைத்து அவற்றை வீட்டின் அருகிலேயே தீவைத்து எரித்துவிட்டேன் என்று தீபிகா போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், ஆற்காடு தாசில்தார் வச்சலா மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
முன்னதாக பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தீபிகா காட்டினார். அப்போது பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட தீபிகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜாவின் உறவினர்கள் கூச்சலிட்டு தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீபிகாவை பாதுகாப்புடன் ஜீப்பில் அழைத்து சென்றனர்.
மேலும் ஆவேசம் அடைந்த ராஜாவின் உறவினர்கள் தீபிகாவின் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபிகாவை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையதாக கருதி வாலிபர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.