நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் விற்பனை? சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் விற்பனை? சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 2:40 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நர்சு உதவியாளர் அமுதவள்ளி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியில் ஏராளமான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்டம் முழுவதும் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டார். இவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

அதேசமயம், கைது செய்யப்பட்ட அமுதவள்ளி உள்பட சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில், ஒரு குழந்தையை விற்பனை செய்வதற்கு 8–க்கும் மேற்பட்ட புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இது தொடர்பாக ஈரோடு, பள்ளிபாளையம் பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 4,300 குழந்தைகள் பிறந்திருப்பதும், இதில் 260–க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை எனவும் சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த 260 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டார்களா? அல்லது அவர்கள் வேறு இடத்திற்கு குடிமாறி சென்றுவிட்டார்களா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, 260 குழந்தைகளின் முகவரிகளை வைத்துக்கொண்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரத்தை கணக்கெடுத்து அவற்றை சரி செய்து உறுதிப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story