ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் 90 சதவீத பள்ளிகள் இணையத்தில் பதிவேற்றம் : முதன்மை கல்வி அலுவலர் தகவல்
ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் 90 சதவீத பள்ளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையை பல்வேறு திட்டங்கள் மூலம் மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு பள்ளியின் விவரம், ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்களை முழுமையாக அறியவும், ஒரு பள்ளிக்கு எது தேவை என்பதை எளிதில் அறியவும், எந்த வசதி அதிகமாக உள்ளதை அறியவும் என்பது உள்பட பல்வேறு தகவல்களை ஒரு புள்ளியின் கீழ் கொண்டு வர அரசு முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் கல்வி மேலாண்மை தகவல் முறை (இ.எம்.ஐ.எஸ்.) மூலம் பள்ளியின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய அரசு பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 90 சதவீத பள்ளிகள் முழுமையாக இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டன.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,179 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 2,541 பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளின் விவரங்களையும் அறிய அரசு எடுத்துள்ள முயற்சியில் பல பள்ளிகள் இணையத்தில் தங்களது பள்ளியின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளன. அதில் ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம், பள்ளியில் கழிவறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள், பள்ளி கட்டிடம், வகுப்பறைகள், சுற்றுச்சுவர் குறித்த அனைத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
இதன் மூலம் ஒரு பள்ளிக்கு எது தேவை என்பதையும், உபரி ஆசிரியர் எத்தனை பேர் உள்ளனர் போன்ற அனைத்து விவரங்களையும் கல்வி அதிகாரிகள் எளிதில் பார்க்க முடியும். பதிவேற்றம் செய்யும் தலைமை ஆசிரியர்கள் மிக துல்லிய விவரத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏனெனில் இனி வருங்காலங்களில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இந்த இணையத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
மேலும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தல் போன்ற பணிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் 90 சதவீத பள்ளிகள் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. ஒரு சில பள்ளிகள் பதிவேற்றம் செய்யவில்லை. அப்பள்ளிகள் விரைந்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.