நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்


நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
x
தினத்தந்தி 18 May 2019 3:45 AM IST (Updated: 17 May 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு வழங்க கோரி 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

நாமக்கல், 

திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கவுரி (வயது 21). பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சீனிவாசனை (24), கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கவுரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு வழங்க கோரி சீனிவாசனும், கவுரியும் தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் விசாரணைக்காக எலச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் கிருஷ்ணமூர்த்தியும் (26), ஆண்டகலூர்கேட்டை சேர்ந்த கணபதி மகள் பிரியதர்சினியும் (20) கடந்த 2 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியதர்சினியின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் வரன் பார்த்துள்ளனர்.

இதனால் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பிரியதர்சினி நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பாதுகாப்பு வழங்க கோரி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

நேற்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story