மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் அருகே பஸ்-ஆட்டோ மோதல்:2 பெண்கள் பரிதாப சாவுசிறுவன் உள்பட 4 பேர் படுகாயம் + "||" + Bus-auto collision near Vithathikulam 2 Women's death toll 4 people including a boy were injured

விளாத்திகுளம் அருகே பஸ்-ஆட்டோ மோதல்:2 பெண்கள் பரிதாப சாவுசிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்

விளாத்திகுளம் அருகே பஸ்-ஆட்டோ மோதல்:2 பெண்கள் பரிதாப சாவுசிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்
விளாத்திகுளம் அருகே பஸ்-ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் சீனிக்கோனார் (வயது 76). இவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவரை பார்த்து மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக சீனிக்கோனாரின் உறவினர்களான கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரியை சேர்ந்த முருகனின் மனைவி சாந்தி (36), அவருடைய தங்கையான எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு முத்தலாபுரத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி கற்பகராணி (34), அவருடைய மகன் மணிகண்டன் (13) ஆகியோர் நேற்று வந்தனர்.

பின்னர் மதியம் சீனிக்கோனாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக என்.வேடப்பட்டியில் இருந்து ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்தனர்.

அந்த ஆட்டோவில் சீனிக்கோனார், அவருடைய மனைவி ஒண்டியம்மாள், சாந்தி, கற்பகராணி, மணிகண்டன் ஆகியோர் ஏறி சொக்கலிங்கபுரத்தில் இருந்து விளாத்திகுளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை என்.வேடப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (25) என்பவர் ஓட்டினார்.

மதியம் 1 மணி அளவில் விளாத்திகுளம் அருகே பனையடிப்பட்டி விலக்கு அருகில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சாந்தி, ஒண்டியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சீனிக்கோனார், கற்பகராணி, சிறுவன் மணிகண்டன், ஆட்டோ டிரைவர் மகேந்திரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒண்டியம்மாள், சாந்தி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பஸ்- ஆட்டோ மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை