வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 உறவினர்கள் பலி


வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 உறவினர்கள் பலி
x
தினத்தந்தி 18 May 2019 3:45 AM IST (Updated: 17 May 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 உறவினர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பரப்பாடியை அடுத்த சவலைக்காரன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் மும்பையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் முருகேசன் நேற்று காலையில் வள்ளியூரில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார். அப்போது அவருடன், அதே ஊரைச் சேர்ந்த உறவினர்களான ஈனமுத்து மகன் விவசாயி கண்ணன் (38), கோபாலகிருஷ்ணன் (50) ஆகியோரும் திருமணத்துக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மதியம் 3.30 மணி அளவில் முருகேசன், கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

வள்ளியூர் பைபாஸ் ரோடு கேசவனேரி சந்திப்பு பகுதியில் சென்றபோது, நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ‘என்ட் டூ என்ட்’ அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். மோதிய வேகத்தில் பஸ்சுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கியது.

உடனே அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகேசன், கோபாலகிருஷ்ணனுக்கு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் முருகேசனை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணனை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான நாகர்கோவில் கோணம் பகுதியைச் சேர்ந்த மோகன்தாசை கைது செய்தனர். விபத்தில் இறந்த முருகேசனுக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விபத்தில் இறந்த கண்ணனுக்கு வேலம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

வள்ளியூரில் திருமணத்துக்கு சென்ற உறவினர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story