மூங்கில்துறைப்பட்டு அருகே, அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவி படுகொலை


மூங்கில்துறைப்பட்டு அருகே, அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவி படுகொலை
x
தினத்தந்தி 18 May 2019 4:15 AM IST (Updated: 17 May 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டை விற்று கடனை அடைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்(வயது 43), கூலி தொழிலாளி. இவருக்கு ராசாத்தி(38) என்ற மனைவியும், ஆஷா(20) என்ற மகளும், எதிஸ்(6) என்ற மகனும் உள்ளனர். சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி ஆஷாவை மணலூர்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். எதிஸ் அதேஊரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான்.

சந்திரன் தனது மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை வீட்டை விற்று அடைக்க முடிவு செய்தார். இதற்கு ராசாத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராசாத்தி தனது மகனுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் சந்திரன் தனது மனைவி உயிருடன் இருந்தால் வீட்டை விற்பனை செய்ய விடமாட்டார் என்று எண்ணி வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராசாத்தியின் தலையில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ராசாத்தி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்தார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எதிஸ் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது ராசாத்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து எதிஸ் அலறினான். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ராசாத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் பற்றி வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளியூருக்கு தப்பி செல்ல பிரம்மகுண்டம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story