துபாயில் கப்பல் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து புன்னக்காயல் வாலிபர் சாவு


துபாயில் கப்பல் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து புன்னக்காயல் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 18 May 2019 3:15 AM IST (Updated: 18 May 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் கப்பல் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து புன்னக்காயல் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை மீட்டு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள புன்னக்காயல் மறக்குடி தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 58). மீனவர். அவருடைய மனைவி ஜெனுடா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள்.

அவர்களில் 3-வதாக பிறந்தவர் கிப்சன் (22). இவர் மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி குஜராத்தில் இருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பலில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த அன்றே அந்த கப்பல் குஜராத்தில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு சென்றது. பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.

கடந்த 15-ந் தேதி கப்பலின் மேல்தளத்தில் உள்ள எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தவறி உள்ளே விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார்.

இதையடுத்து கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து கிப்சனை மீட்டனர். பின்னர் இதுகுறித்து மும்பை துறைமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கிருந்து புறப்பட்டு வந்த வேறொரு விரைவு கப்பல் மூலம் கிப்சனை துபாய்க்கு கொண்டு சென்றனர். அங்கு அஜ்மன் என்ற பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனை முடிந்து அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. அவர் இறந்த தகவல் நேற்று முன்தினம் இரவு புன்னக்காயலில் உள்ள பெற்றோருக்கு கிடைத்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் இதுதொடர்பாக புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தினருடன் கிப்சனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்தனர்.

தங்களுடைய மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கப்பல் வேலைக்கு சேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கிப்சன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story