போரூர் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி பேராசிரியரிடம் 40 பவுன் நகை திருட்டு
போரூர் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி பேராசிரியரிடம் 40 பவுன் நகை, ரூ.19 ஆயிரம் மற்றும் மடிக்கணினி இருந்த பையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
பூந்தமல்லி,
கடலூர் கே.கே.நகரை சேர்ந்தவர் ஜான் கிருபாகரன்(வயது 39). இவர், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தங்கி, அங்குள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரின்லி.
கடலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கிருபாகரன் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தார். பின்னர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கடலூருக்கு புதுச்சேரி செல்லும் பஸ்சில் ஏறினர்.
40 பவுன் நகை திருட்டு
தங்களிடம் இருந்த பையை, இருக்கையின் மேல்புறம் வைத்துவிட்டு இருவரும் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அந்த பஸ், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு போரூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது கிருபாகரன், இருக்கையின் மேல்புறம் வைத்து இருந்த பையை எடுக்க முயன்றார். அதில் அங்கு பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ் முழுவதும் தேடியும் பையை காணவில்லை. கோயம்பேடு பஸ் நிலையத்தில் மர்மநபர்கள் யாரோ அந்த பையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
அதில் 40 பவுன் நகை, ரூ.19 ஆயிரம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வைத்து இருந்தார். இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளை குறி வைத்து இதுபோல் அடிக்கடி நகை, பணம் திருடும் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரையும் இதுவரையிலும் போலீசார் கைது செய்யவில்லை.
எனவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story