மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழைசூறைக்காற்றில் வாழைகள் சேதம் + "||" + Distant rains in the district Banana damage in the sun

மாவட்டத்தில் பரவலாக மழைசூறைக்காற்றில் வாழைகள் சேதம்

மாவட்டத்தில் பரவலாக மழைசூறைக்காற்றில் வாழைகள் சேதம்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. களக்காட்டில் சூறைக்காற்றில் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன.

நெல்லை, 

அக்னி நட்சத்திரத்தையொட்டி, நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நெல்லை பகுதியில் வெயிலின் தாக்கம் நேற்று காலையில் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் லேசான மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதேபோல் மாறாந்தை, புதூர், சீதபற்பநல்லூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

சூறைக்காற்றின்போது, பாளையங்கோட்டை சாந்திநகர் 5-வது குறுக்குத்தெரு பிள்ளையார் கோவில் அருகில் நின்ற பழமைவாய்ந்த வேப்ப மரத்தின் பெரிய கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இந்த கிளையானது அருகில் இருந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளின் மீதும் விழுந்தது. இதனால் மின்கம்பம் சாய்ந்து, மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் விழுந்து கிடந்த மரத்தின் கிளையையும் வெட்டி அகற்றினர். தாசில்தார் கனகராஜ் தலைமையில் வருவாய் துறையினரும் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாங்குநேரி, பொன்னாக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. முக்கூடல், சுத்தமல்லி, பேட்டை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதேபோல் பாபாநாசம் மலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பாபநாசம் காரையாறு அணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. பாபநாசம் கீழ் அணையில் மாலையில் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.

களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி அளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. களக்காடு சிதம்பராபுரத்தில் சூறைக்காற்றில் 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. வாசுதேவநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5 மணி அளவில் பலத்த மழை சுமார் 1½ மணி நேரம் பெய்தது. இதனால் வாசுதேவநல்லூர் கீழ பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிவகிரியில் மாலை 5.30 மணி அளவில் பலத்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. செங்கோட்டையில் மாலை 6.15 மணி அளவில் பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேரன்மாதேவியில் 3 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை