அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி, பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை


அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி, பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 17 May 2019 11:30 PM GMT (Updated: 17 May 2019 9:00 PM GMT)

அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவினாசி,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவருடைய மனைவி தமிழரசி (25). இவர்களுடைய மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3). ரமேஷ் தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் நாட்டாமை தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் ரமேஷ் சென்றார். பின்னர் அங்கு சில நாட்கள் தங்கி விட்டு குடியாத்தத்தில் இருந்து மீண்டும் கண்ணம்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது சிறுவன் ஈஸ்வரன் அமர்ந்து இருந்தான். பின் இருக்கையில் தமிழரசி இருந்தார். ரமேசுக்கும், தமிழரசிக்கும் நடுவில் குழந்தை நித்திகா இருந்தாள். குடியாத்தத்தில் இருந்து புறப்பட்ட ரமேஷ் நேற்று காலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று, ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் ரமேசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து இருந்த சிறுவன் ஈஸ்வரன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.

ரமேஷ், தமிழரசி மற்றும் குழந்தை நித்திகா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசாரும், அந்த வழியாக சென்றவர்களும், அவர்களை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் மற்றும் தமிழரசி ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தை நித்திகாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கி சின்னாபின்னமானது.

இதையடுத்து சிறுவன் ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது பின்னால் வந்த கார் மோதியதில் தம்பதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பலத்த காயம் அடைந்த குழந்தை நித்திகா சம்பவ இடத்திலேயே மயங்கி கிடந்தாள். பின்னர் அந்த குழந்தையையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அந்த குழந்தைக்கு தனது தாய், தந்தை மற்றும் அண்ணன் இறந்தது தெரியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எழுந்து, அம்மா... அம்மா... என்று அழுதுகொண்டிருக்கிறாள். அந்த மழலை குரலை கேட்டு அருகில் இருப்பவர்களால் என்ன ஆறுதல் சொல்ல முடியும். அம்மா எங்கே, அம்மா எங்கே என்று குரல் வரும் முன்னே அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வருகிறது. அனாதையாக தவிக்கும் குழந்தை நித்திகாவின் நிலைமையை பார்த்தால் கல் மனதும் கரைந்துவிடும்.

Next Story