திருப்பத்தூர் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி


திருப்பத்தூர் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 9:46 PM GMT)

திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்ததால் கத்திரி வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பத்தூர்,

கடந்த 4–ந்தேதி முதல் தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வயதானவர்கள், குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினர் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்த கத்திரி வெயில் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து திருப்பத்தூர் பஸ்நிலையம், அண்ணாசிலை, பைபாஸ்சாலை, காட்டாம்பூர், சிவகங்கை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் இந்த பகுதி முழுவதும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் சிவகங்கை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நேற்று மாலை பலத்த இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையினால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இது தவிர மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலு நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழ்நிலை ஏற்பட்டது.


Next Story