சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் ரெயில்வே பாலங்களில் கண்காணிக்க வலியுறுத்தல்
மானாமதுரையில் உள்ள ரெயில்வே பாலங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், பாலங்களில் பலத்த கண்காணிப்பு நடத்த வேண்டும் என்று ரெயில்வே ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட 7முக்கிய ரெயில்வே நிலையங்களில் மானாமதுரை ரெயில்வே நிலையமும் ஒன்றாகும். மானாமதுரையில் இருந்து விருதுநகர், ராமேசுவரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாதைகளின் குறுக்கே செல்லும் ஓடைகள், ஆறுகள், கால்வாய்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தரைப்பாலங்களை விட ரெயில்வே பாலங்கள் சற்று வித்தியாசமாக அமைக்கப்படுவது வழக்கம்.
ரெயில்வே பாதையில் உள்ள பாலங்களில் குகை போன்ற அமைப்புடன் கட்டப்படுவதுடன் பாலங்களில் உள்ள தூண்களைச் சுற்றிலும் ஆட்கள் அமரும் அளவிற்கு பிளாட்பாரம் அமைத்து கட்டப்படும். அந்த பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு வசதியாக ரெயில் பாதைகளில் இருந்து இரும்பு ஏணி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. இதனை சமூக விரோதிகள் தங்கள் வசதிக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறியதாவது:– மானாமதுரை– விருதுநகர் ரெயில்வே பாதை மற்றும் மானாமதுரை–சிவகங்கை ஆகிய ரெயில்வே பாதையில் உள்ள பாலங்களில் கூட்டமாக அமர்ந்து மது குடித்து விட்டு, காலி மது பாட்டில்களை ரெயில்வே தண்டவாளங்களில் உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ரெயில்வே பாலங்களில் இறங்க முடியாத நிலை உள்ளது. மேலும் உடைந்த பாட்டில்களால் ரெயில்வே ஊழியர்கள் காயமடைந்து வருகின்றனர்.
ரெயில்வே பாதையில் உள்ள பாலங்களில் ரெயில்வே போலீசாரின் ரோந்து பணி இல்லாததால் சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த செயல்களை தடுக்க ரெயில்வே பாலங்களில், ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.