கீரமங்கலம் பகுதியில் ‘கஜா’ புயலால் சேதமடைந்த அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படாத அவலம்


கீரமங்கலம் பகுதியில் ‘கஜா’ புயலால் சேதமடைந்த அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படாத அவலம்
x
தினத்தந்தி 17 May 2019 10:32 PM GMT (Updated: 17 May 2019 10:32 PM GMT)

கீரமங்கலம் பகுதியில் ‘கஜா’ புயலால் சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் இன்னும் சீரமைக்கப்படாததால் அவல நிலை நீடிக்கிறது.

கீரமங்கலம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில் புதுக்கோட்டை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள், அரசு பள்ளிகளின் மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் உடைந்து நாசமாயின. குறிப்பாக கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, புள்ளான்விடுதி மற்றும் பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள் உடைந்து நாசமாயின.

தோட்டங்களில் விழுந்த மரங்களை இன்னும் அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கீரமங்கலம் அரசு மகளிர் விடுதியின் சுற்றுச்சுவர் உடைந்து இதுவரை சீரமைக்கப்படாததால் மாணவிகள் அச்சத்துடன் விடுதியில் தங்கி இருந்தனர். அதேபோல மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றிலும் உடைந்து உள்ளது. இதேபோல, மரங்கள் விழுந்ததில் வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் உடைந்து கிடக்கிறது. இதில் மரங்களை வெட்டி எடுத்து சென்றவர்கள் அதன் கிளைகளை அதே இடத்தில் போட்டு விட்டு சென்று விட்டனர்.

இதேபோல கொத்தமங்கலத்திலும் அரசு பள்ளி சுற்றுச் சுவர்கள், பள்ளி மேற்கூரைகள் உடைந்து காணப்படுகிறது. இப்படி கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளிகளின் சுற்றுச்சுவர் மற்றும் விடுதி சுற்றுச் சுவர்கள் உடைந்து உள்ளது. புயல் தாக்கி 6 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் எந்த ஊரிலும் பள்ளி சுற்றுச் சுவர்கள் சீரமைக்கப்படாத நிலையே நீடிக்கிறது.கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம்(ஜூன்) 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்குள் சேதமடைந்த பள்ளிகளின் மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர்களை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story