கீரனூர் அருகே பிணத்தை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கீரனூர் அருகே பிணத்தை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2019 10:43 PM GMT (Updated: 17 May 2019 10:43 PM GMT)

கீரனூர் அருகே பிணத்தை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்.

கீரனூர்,

புதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரம் தேக்கப்பட்டியை சேர்ந்த அகத்தியன்(வயது 50) என்பவர் கரூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல், கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அகத்தியன் பிணத்தை அரசு ஆம்புலன்சில்(அமரர் ஊர்தி) ஏற்றி நமணசமுத்திரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த ஆம்புலன்சில் அகத்தியனின் உறவினர்கள் 4 பேர் உடன் சென்றனர்.

நல்லூர் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது கரூர் மருத்துவமனையில் இருந்து உடனடியாக ஆம்புலன்ஸ் தேவைப்படுவதாக அதன் டிரைவருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அகத்தியன் பிணம் அதில் ஏற்றப்பட்டது. கரூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்று விட்டது.

அகத்தியன் பிணத்தை ஏற்றிச்சென்ற மாற்று ஆம்புலன்ஸ், கீரனூர் அருகே தனியார் கல்லூரி அருகே சென்றபோது உள்ளே இருந்து குபு, குபு என புகை வந்தது. இதனால், டிரைவர் சுப்பையா(40) ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி விட்டு 4 பேரையும் கீழே இறங்க செய்தார். பின்னர், பிணமும் கீழே இறக்கி வைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்லத்துரை தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் அந்த ஆம்புலன்ஸ் தீயில் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story