பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து, கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை - கீழ்வேளூர் அருகே நடந்தது


பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து, கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை - கீழ்வேளூர் அருகே நடந்தது
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கீழ்வேளூர் அருகே கூட்டுறவு வங்கியை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்குபனையூர் கூட்டுறவு வங்கியில் வடக்குபனையூர், தெற்கு பனையூர், அனக்குடி ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் 2017-18-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் தொகையை 920 விவசாயிகள் செலுத்தியுள்ளனர். இதில் 651 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் பயிர்காப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாக கூட்டுறவு வங்கிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. ஆனால், வழங்கபட்ட தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் 3 மாதங்களாக கூட்டுறவு வங்கி காலம் தாழ்த்தி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்களிடம் கேட்ட போது, சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து வடக்குபனையூர் கூட்டுறவு வங்கியை 500-க்கு மேற்பட்ட விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சரவணபெருமாள் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பயிர் காப்பீட்டுக்கான தொகையை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- அதிகாரிகள் கூறியபடி எங்களுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை வழங்காவிட்டால் வருகிற 25-ந் தேதி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

Next Story