வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது


வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 17 May 2019 10:57 PM GMT (Updated: 17 May 2019 10:57 PM GMT)

தளவாபாளையத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட் டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வாக்கு எண்ணும் நாளான வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் மையத்திற்கு காலை 5 மணிக்கு முன்னதாகவே வருகைதர வேண்டும். மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எந்தெந்த மேஜையில் பணியாற்ற உள்ளார்கள் என்பது 23-ந்தேதி காலை 5 மணிக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு தெரியவரும். அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்போது கைபேசி, லேப்-டாப், ஐ-பேட் உட்பட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் எடுத்துவரக்கூடாது. சதாரண கால்குலேட்டர் மட்டும் தேவைப்பட்டால் எடுத்து வரலாம். மேலும், புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை அணிந்துவரவேண்டும்.

வாக்குகள் எண்ணும் பணிக்காக ஒரு சட்டமன்றத்தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாக்குகள் எண்ணும் மேஜைக்கும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் என மூன்று நபர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வாக்குகளும் குறிக்கப்பட்ட பின்னர் வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளரால் கையொப்பம் இடப்பட்டு, அப்போது இருக்கும் அனைத்து முகவர்களிடமும் கையொப்பம் பெறவேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும்வரை அறையைவிட்டு வெளியில் செல்லக்கூடாது. காலையில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிகளுக்குட்பட்ட அலுவலர்களுக்கும், மதியம் மணப்பாறை, விராலிமலை மற்றும் வேட சந்தூர் தொகுதிகளுக்குட்பட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் செல்வசுரபி (பொது), ரவிச்சந்திரன் (தேர்தல்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணமூர்த்தி (கரூர்), மீனாட்சி (அரவக்குறிச்சி), மல்லிகா(கிருஷ்ணராயபுரம்), காமராஜ் (மணப்பாறை), ராமு (வேடசந்துார்), சிவதாஸ்(விராலிமலை), உதவி கலெக்டர்கள் கணேஷ், லீலாவதி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story