குடோனில் பதுக்கிய 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்


குடோனில் பதுக்கிய 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 May 2019 11:20 PM GMT (Updated: 17 May 2019 11:20 PM GMT)

திருச்சியில் குடோனில் பதுக்கிய 2 டன் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

திருச்சி பெரியகம்மாளத்தெரு அருகே ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் ஸ்டாலின், முத்துராஜா, மாரியப்பன், ராமசாமி, தங்கவேல், ஜனகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 9 மணிக்கு பெரியகம்மாளத்தெருவில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 டன் அளவுக்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன.

இவை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் சில மாதிரிகளை சோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த சோதனை முடிவு வந்தவுடன் சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மருந்து தெளிக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகும்.

ஆகவே மருந்து தெளிக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பெல்லாம் கார்பைடு கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்தனர். தற்போது நவீன முறையில் ஸ்பிரே மூலம் மருந்து தெளித்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது. இயற்கையில் பழுக்கும் மாம்பழங்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story