23-ந்தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


23-ந்தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 17 May 2019 11:22 PM GMT (Updated: 17 May 2019 11:22 PM GMT)

23-ந்தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் என அரவக்குறிச்சியில் நடந்த இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.செந்தில்பாலாஜி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக கரூர் வருகை தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை 8 மணியளவில் ஓட்டலில் இருந்து திறந்த வேனில் புறப்பட்ட ஸ்டாலின், அரவக்குறிச்சி ஒன்றியம் தடாகோவில் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், தென்னிலை, பரமத்தி, சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாளை (19-ந்தேதி) நடைபெறக்கூடிய அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்ககூடிய செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்ய உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்பதற்காக உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

ஏற்கனவே கடந்த மாதம் 18-ந்தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டிருக்கிறீர்கள். மத்தியில் உள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், குறிப்பாக மோடி ஒரு நிமிடம் கூட பிரதமர் பதவியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தந்தீர்கள். அதன்படி கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் ஆதரவு தந்து மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதரவு கொடுத்தீர்கள்.

அதேபோல் மோடியின் எடுபிடியாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வருகிற 19-ந்தேதி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். ஆகவே இந்த ஆட்சி கவிழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டது. மே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மோடிக்கு முடிவு கட்டப்படுவதோடு, எடப்பாடி ஆட்சியும் தானாகவே கவிழ்ந்துவிடும் என்பது நிச்சயமாகிவிட்டது.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று மேற்கொள்கிற பிரசாரங்களில் எல்லாம், எனது ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என தொடர்ந்து பேசி வருகிறார். ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அது தானாகவே கவிழப்போவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 இடைத்தேர்தலிலும், ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இதனையும் சேர்த்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டசபையில் 119 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்து விடுவார்கள். இதனை தடுத்து நிறுத்துவதற்காக தான் சபாநாயகர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் திட்டமிட்டு சதி செய்தார்கள். 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்து விடலாம் என ஒரு நோட்டீசு கொடுத்தனர்.

அது கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்தில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என நான் ஒரு நோட்டீசு அனுப்பினேன். இது அரசியல் ராஜதந்திரம். ஏனெனில் கலைஞரின் மகன் நான். அவரது ராஜதந்திரத்தில் 5 சதவீதமாவது எனக்கிருக்காதா?. இந்தநிலையில் தான் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் தடை போட்டது. சர்வாதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆட்சி செயல்படலாம். மத்தியில் மோடி இருந்தாலாவது ஆட்சியை காப்பாற்றுவார். ஆனால் அவரே வீட்டுக்கு செல்வது உறுதி. மேலும் தற்போது கோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை என்பதால் அப்பீலுக்கும் செல்ல முடியாது. எனவே மே 23-ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

அதன்படி தமிழகத்தில் தி.மு.க. மெஜாரிட்டி ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்கி தர வேண்டும். எடப்பாடி ஆட்சியை வீட்டுக்குஅனுப்புவதற்கான நல்ல வாய்ப்பு, அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே செந்தில்பாலாஜியை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்து சட்டமன்றத்துக்கு நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி உதயமாகிறபோது, அரவக்குறிச்சி தொகுதியில் நிலவுகிற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கடமையாற்ற செந்தில்பாலாஜி காத்திருக்கிறார்.

அரவக்குறிச்சி ஒன்றிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூரில் கூட்டுறவு நூற்பாலையிடத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பது, அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்துவது, முருங்கை காய்களை பதப்படுத்த குள்ர்பதன கிடங்கு அமைத்து அதனை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்வது, ஏரி-குளங்களை தூர்வாரி நீர்மேலாண்மையை கையாண்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, கிராமங்களில் செம்மறியாடு வளர்ப்பினை ஊக்குவிக்க கால்நடை வளர்ப்பு மற்றம் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பது என்பன உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தரப்படும்.

தமிழகத்தில் தற்போது 100 நாள் வேலை திட்டத்தில், குறைவான நாட்களில் தான் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்ல. ஊதியத்தை கூட முறையாக வழங்க முடியாத நிலையில் தான் இந்த ஆட்சியின் செயல்பாடு இருக்கிறது. ஆகவே தான் 100 நாள் வேலை திட்டத்தை சீர்படுத்தி 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அது மட்டும் அல்லாமல் அதற்கான ஊதியத்தை பெற வங்கி, அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்படாது. கமிஷன், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

வாரத்திற்கு ஒரு முறை தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே வந்து ஊதியத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு காட்டியதைப்போல் தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் வீடில்லாத ஏழை, எளியோரை கணக்கீடு செய்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கும் திட்டத்தை செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார். இது குறித்து நானும் அவரிடத்தில் விவாதித்து இருக்கிறேன். இது அரவக்குறிச்சிக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் ஏற்படுத்தக்கூடிய திட்டம் என்பதை உணர்ந்து அதை நானும் அறிவித்திருக்கிறேன். இதுபோன்ற திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நாங்கள் முனைப்புடன் செயல்படுவோம்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் மக்களின் தேவைகளை அறிந்து வாக்குறுதிகளை அறிவித்தோம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கிராமப்புற மகளிருக்கு சிறு தொழில்கள் செய்து பிழைப்பு நடத்துவதற்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்குவது, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள 1 கோடி பேருக்கு சாலை பணியாளராக வேலை வழங்குவது, பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது என அறிவித்து அதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் கிட்டதட்ட ரூ.300 செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.100 தான் செலுத்தினீர்கள் என்பதன் அடிப்படையில் கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். எனவே மீண்டும் தி.மு.க. ஆட்சி வருகிறபோது கேபிள் டி.வி. கட்டணமாக ரூ.100 செலுத்தினால் போதும். வறுமையின் காரணமாக அடமானம் வைத்த கம்மல், மூக்குத்தி, தாலி உள்ளிட்ட தங்கநகைகளை மீட்க முடியாமல் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 5 பவுன் வரை தங்க நகைக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கிறோம். கலைஞர் தான் உறுதிமொழி அளிக்கிற போது சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என வாக்கு கொடுப்பார். ஆகவே கலைஞரின் மகனாக நானும் அவர் வழியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அதற்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு பக்கபலமாக உதய சூரியனுக்கு ஆதரவு தாருங்கள்.

திருவாரூரில் நமது தலைவர் கலைஞர் நம்மை விட்டு பிரிந்ததால் இடைத்தேர்தல் வந்தது. ஆனால் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் ஏன் வந்தது?. ஏற்கனவே செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்து நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். ஆனால் அங்கு அவரால் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. எதற்காக இவரது பதவியை பறித்தார்கள்? ஆட்சியை மாற்ற வேண்டும் என சொன்னாரா? அல்லது ஆட்சியை எதிர்த்து ஓட்டு போட்டாரா? எதிராக செயல்பட்டாரா? என்றால் இல்லை.

மாறாக அவர் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை எதற்காக சந்தித்து மனு கொடுத்தனர். எல்லா துறைகளையும் சேர்த்து கண்காணிப்பது தான் முதல்-அமைச்சரின் பொறுப்பு. இதே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கருணாநிதி, பக்தவச்சலம் உள்ளிட்டோர் முதல்-அமைச்சராக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, அனைத்து துறைகளையும் கண்காணித்தனர். அனைத்து துறை கோப்புகளும் முதல்-அமைச்சரின் பார்வைக்கு வரும்.

முக்கியமாக சட்டம் ஒழுங்கினை பாதுகாக்ககூடிய காவல்துறை, முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் தான் இருக்கும். மற்ற துறைகளையெல்லாம் அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியை பார்த்தீர்களேயானால், அவர் காவல்துறையை கையில் வைத்து கொண்டு, அதையும் தாண்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இப்படி பல முக்கியமான துறைகளை தானே வைத்து கொண்டார். ஏனெனில், எதில் அதிகம் கொள்ளையடிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நடந்தது.

இதனை எதிர்த்து தான் வேறொருவரை முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என நியாயமான கோரிக்கையை கவர்னரிடம் அந்த எம்.எல்.ஏக்கள் முன் வைத்தனர். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தெரியுமா?. கோரிக்கை வைத்த 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கொண்டனர். இது தான் நடந்தது.

ஆகவே இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த அயோக்கியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால், செந்தில்பாலாஜியை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கு உதய சூரியனுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு இடைத்தேர்தல் பயன்படப்போகிறது. அதில் அரவக்குறிச்சி தொகுதியும் உதவப்போகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குசேகரிப்பின்போது தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை அரவக்குறிச்சியில் முடித்துக் கொண்டார். பின்னர் அவர் இரவு 8.15 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

Next Story