8 வாக்குச்சாவடிகளில் இன்று மறுஓட்டுப்பதிவை அமைதியாக நடத்த நடவடிக்கை கலெக்டர் மலர்விழி பேட்டி


8 வாக்குச்சாவடிகளில் இன்று மறுஓட்டுப்பதிவை அமைதியாக நடத்த நடவடிக்கை கலெக்டர் மலர்விழி பேட்டி
x
தினத்தந்தி 18 May 2019 10:45 PM GMT (Updated: 18 May 2019 4:02 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) மறுஓட்டுப்பதிவை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிப்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 8 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நாளை(இன்று) நடக்கிறது. இந்த மறுஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியாணை குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மறுஓட்டுப்பதிவை அமைதியான முறையில் சுதந்திரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்களிக்கும் வாக்காளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உரிய பாதுகாப்புடன் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மறுஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகள் ஒவ்வொன்றிலும் தலா மூன்று வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

வாக்குச்சாவடிகளின் வெளிப்பகுதிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இடைவெளியில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்காளர்கள், பொதுமக்கள் நடமாட்டம் பதிவு செய்யப்படுகிறது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 3 ஊர்களிலும் மொத்தம் 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளிலும் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடர்பான பணிகளை 8 வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிகளில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 566 போலீசார், மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 24 வீரர்கள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மறுஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது ஓட்டுப்பதிவு முடிந்தபின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என்ற பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதுதொடர்பாக வாக்குச்சாவடிகளில் உள்ள முகவர்களிடம் கையொப்பம் பெறப்படும். பின்னர் அவை உரிய பாதுகாப்புடன் தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்படும். அங்கு உரிய விதிமுறைகளின்படி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூம்களில் வைக்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடந்த ஓட்டுப்பதிவின்போது மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டு அவற்றின் மீது வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தபடாதவை என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். பின்னர் அவை தனியாக வைக்கப்படும். இந்த மறு ஓட்டுப்பதிவுக்கான பணியில் 50 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இதேபோல் 8 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 8 நுண்பார்வையாளர்கள் மறு ஓட்டுப்பதிவை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

Next Story