23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு பணியில் 650 போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்


23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு பணியில் 650 போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 4:40 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணியில் 650 போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 109 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களில் 300 பேர் வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளேயே பணி அமர்த்தப்பட உள்ளனர்.

உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிக்கு சொந்தமான ஆஸ்பத்திரி முன்பு என இரு இடங்களில் வாகனங்களை ‘பார்க்கிங்’ செய்ய ஏற்பாடு செய்து உள்ளோம். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அரசியல் கட்சியினர் மற்றும் முகவர்கள் இங்கு வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் அனுமதி இல்லை. எனவே அனைவரும் சோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வெற்றிபெற்ற கட்சியினர் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். எனவே அன்று தலைவர்களின் சிலைக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story