கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை கலெக்டர் பிரபாகர் தகவல்


கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 18 May 2019 11:15 PM GMT (Updated: 18 May 2019 5:43 PM GMT)

கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிருஷ்ணகிரி, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு எண்ணும் மையத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளரின் தேர்தல் முகவர் மற்றும் வேட்பாளாரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கான முகவர்கள் ஆகியோருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டை இல்லாதவர்கள் முற்றிலுமாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதி இல்லை.

மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் நாளன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்து முகவர்களுக்கான உறுதி மொழி படிவத்தில் கையொப்பம் இட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தரும் அரசுத்துறை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இதர பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் செல்போன் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய நுழைவுவாயிலான 2-வது கேட் வழியாக அரசு பணியாளர்கள் வேட்பாளர்் முகவர்கள், பொது முகவர்கள், ஓசூர் இடைத்தேர்தல் வேட்பாளர் முகவர்கள் ஆகியோர்் உள்ளே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு பக்கம் ஆவின் பூத் அருகில் உள்ள 3-வது நுழைவு வாயிலில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தளி ஆகிய தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர் முகவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளே செல்லலாம். எனவே வாக்கு எண்ணும் பணி சிறப்பாக நடைபெற வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story