முத்துப்பேட்டையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு


முத்துப்பேட்டையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 May 2019 4:45 AM IST (Updated: 19 May 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை உள்ளது. இதனை கடந்த 23.8.1993-ம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர் துரை.ராமசாமி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள், நினைவு தினம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து அந்த எம்.ஜி.ஆர். சிலை துணியால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையில் சுற்றப்பட்ட துணிக்கு தீ வைத்துள்ளனர். இதில் சிலையை சுற்றி இருந்த துணி தீ பிடித்து எரிந்துள்ளது. நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிவதை சிலையின் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த டிரைவர்கள் பார்த்து உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.

உடனடியாக பார்த்து தீ அணைக்கப்பட்டதால் சிலையின் பின்பக்கத்தில் சுற்றியிருந்த துணி மட்டும் எரிந்தது. இல்லையென்றால் சிலை முழுவதும் எரிந்து நாசமாகி இருக்கும் என்று அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நேற்று காலை அ.தி.மு.க. நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் மருது ராஜேந்திரன் தலைமையில், கட்சியினர் திரளானோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து தீ வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அங்கு இருந்த அ.தி.மு.க.வினரிடம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்குமாறும், அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து அ.தி.மு.க.வினர், அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் தீவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை வேறு ஒரு புதிய துணியை சுற்றி மறைத்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. நகர துணைச்செயலாளர் மைநூர்தீன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் எம்.ஜி.ஆர். சிலைக்கு தீவைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எம்.ஜி.ஆர். சிலையின் அருகில்தான் போலீஸ் நிலையம் அமைந்து உள்ளது. அருகில் போலீஸ் நிலையம் இருந்தும் இந்த சம்பவம் நடந்துள்ளதே என கட்சியினர் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story