ஊஞ்சலூர் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு
ஊஞ்சலூர் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. அவைகள் கடத்தப்பட்டவையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊஞ்சலூர்,
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர் பனங்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 29), தேவராஜ் (20), ஜெகதீஷ் (19), மவுனி (22), சங்கர் (22). இவர்கள் 5 பேரும் பாசூர் ரெயில்வே நிலையம் அருகே செல்லும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றனர். தற்போது காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரில் அவர்கள் 5 பேரும் வலை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது வலையை இழுத்தபோது அவர்களால் இழுக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வலைக்குள் பார்த்தனர். அதில், ஒரு சாக்குப்பை சிக்கி இருந்தது. அந்த சாக்குப்பையை அவர்கள் திறந்து பார்த்தபோது, சுமார் 2½ அடி உயரம் கொண்ட வலம்புரி விநாயகர் சிலை மற்றும் 1 அடி உயரம் உள்ள நடராஜர் சிலை இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரும் இதுபற்றி கிளாம்பாடி வருவாய் ஆய்வாளருக்கும், மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, வலையில் சிக்கியிருந்த சிலைகளை பார்வையிட்டனர். அப்போது வலையில் சிக்கிய சிலைகள் 2-ம் ஐம்பொன் சிலைகள் என்பது தெரியவந்தது. அதன்பின்னர் 2 சாமி சிலைகளும் மீட்கப்பட்டு வருவாய் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் கடத்தல்காரர்கள் கடத்திச்செல்லும்போது வாய்க்காலில் வீசிச்சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து வருவாய் அதிகாரி ரமேஷ் கார்த்திக் கூறுகையில், ‘காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் ஒப்படைக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story