தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையோர வாகனங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையோர வாகனங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:28 PM GMT)

தஞ்சையில் சாலையோரத்தில் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?, என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரம் சுற்றுலா தலம் ஆகும். இங்கு உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை உள்ளன. இதனால் தஞ்சைக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சை போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக காந்திஜி சாலை, பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு அலங்கம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும். இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஆங்காங்கே சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது தான். வழக்கமாக ஊருக்கு வெளியே சாலையோரங்களில் கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும். காந்திஜி சாலையில் அடிக்கடி இது போன்று வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே போல் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து மகர்நோன்புச்சாவடிக்கு செல்லும் எம்.கே.மூப்பனார் சாலையிலும் இது போன்று வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. கார், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை சாலையோரங்களிலேயே நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்த வழியாகத்தான் திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் டவுன் பஸ்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.

சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ஒரே நேரத்தில் எதிரும், புதிரும் வாகனங்கள் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக தலைமை தபால் நிலையத்தில் இருந்து கல்லணைக்கால்வாய் பாலம் வரை இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story