ஆசைவார்த்தை கூறி 8-ம் வகுப்பு மாணவியை கடத்திய கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தை கூறி 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றதாக கட்டிட தொழிலாளி ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தார்கள்.
மொடக்குறிச்சி,
கோபி கூகலூரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மகன் குமார் (வயது 26). கட்டிட தொழிலாளி.
ஈரோடு அருகே உள்ள சாவடிப்பாளையம்புதூர் பகுதியில் கோவையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவர் தங்கியிருந்து கட்டிடங்கள் கட்டி வருகிறார். இவரிடம் குமார் வேலை பார்த்து வந்தார். அதனால் அங்கேயே அவரும் தங்கியிருந்தார்.
காண்டிராக்டருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கோவையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் தந்தையுடன் அவரும் வந்து தங்கினார்.
இந்த நிலையில் மாணவியிடம் பழகிய குமார், திருமண ஆசைவார்த்தை கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை கடத்தி சென்றுவிட்டதாக தெரிகிறது. இதுபற்றி காண்டிராக்டர் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதில், ‘என் மகள் 13 வயது சிறுமி. அவரை கடத்தி சென்ற குமாரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். என் மகளை மீட்டுத்தர வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருந்துறை பகுதியில் பதுங்கியிருந்த குமாரை கண்டுபிடித்து மாணவியை மீட்டார்கள். மேலும் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள்.
Related Tags :
Next Story