வில்லிவாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செல்போன்கள் திருட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொள்ளையர்கள் கைவரிசை
வில்லிவாக்கத்தில், பயங்கர ஆயுதங்களுடன் வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் ரூ.97 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 52). இவர், வில்லிவாக்கத்தில் புதிய செல்போன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே மீரான் (21) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை மீரான், மசூதி செல்வதற்காக பெட்டிக்கடையின் முன்பு நிறுத்தி இருந்த தனது மோட்டார்சைக்கிளை எடுக்க அங்கு வந்தார். அப்போது பூட்டி இருந்த முகமது முஸ்தபாவின் செல்போன் கடைக்குள் இருந்து சிலர் பேசும் சத்தம் கேட்டது.
பயங்கர ஆயுதங்கள்
இதனால் சந்தேகம் அடைந்த மீரான், செல்போன் கடையின் கதவை தட்டி, “உள்ளே யார்?” என்று கேட்டார். அப்போது கடையின் கதவை திறந்து கொண்டு, கையில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் வெளியே வந்தனர். அவர்கள், மீரானை தாக்க முயன்றனர்.
உடனே அங்கிருந்து தப்பி ஓடிய மீரான், தனது உறவினர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு மீண்டும் அங்கு வந்தார். இதை பார்த்த மர்மநபர் கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ரூ.6 லட்சம் செல்போன்கள் திருட்டு
இதுபற்றி முகமது முஸ்தபாவுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அதில், பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு விற்பனைக்காக வைத்து இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.97 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டது தெரிந்தது.
மேலும் கொள்ளையர்கள் தங்களின் உருவம் பதிவாகாமல் இருக்க கடையில் இருந்த 4 கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ஐ.சி.எப் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story