வையம்பட்டி அருகே துப்பாக்கியுடன் வந்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்


வையம்பட்டி அருகே துப்பாக்கியுடன் வந்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்
x
தினத்தந்தி 19 May 2019 3:45 AM IST (Updated: 19 May 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே துப்பாக்கியுடன் வந்த திருச்சி போலீஸ்காரர் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வையம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள சீத்தகிழவனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் திருச்சியில் முதலாவது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவருடன், அவருடைய உறவினரான மற்றொரு கார்த்திக் வந்தார். வையம்பட்டி அருகே கல்பட்டி பகுதியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க சென்றனர்.

துப்பாக்கி

அப்போது, மோட்டார் சைக்கிள் அருகே பெரிய துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுபற்றி வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு சர்மு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அது ‘ஏர்கன்’ என்றும், போலீஸ்காரர் கார்த்திக் சொந்த ஊரில் வீடு கட்டி வருவதால், தனது துப்பாக்கியை திருச்சிக்கு எடுத்துவந்த போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, துப்பாக்கியை ஒப்படைக்காமல் வைத்திருந்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story