சென்னை மெரினா அருகே தீ விபத்தில் 13 குடிசைகள் சாம்பல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு


சென்னை மெரினா அருகே தீ விபத்தில் 13 குடிசைகள் சாம்பல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 May 2019 4:30 AM IST (Updated: 19 May 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா அருகே டுமீல் குப்பத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 13 குடிசைகள் எரிந்து நாசமாயின. 3 வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.

அடையாறு,

சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தை அடுத்த டுமீல் குப்பத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை ஒட்டி சுமார் 40 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு மீனவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் குடிசையில் வசிப்பவர்கள், வீடுகளை பூட்டிவிட்டு கடற்கரை மணல் பரப்பில் காற்றோட்டமாக படுத்து தூங்கினர்.

நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பயங்கர சத்தம் கேட்டு விழித்து பார்த்தனர். அப்போது அவர்களின் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிவதையும், வீடுகளில் உள்ள கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

13 குடிசைகள் சாம்பல்

உடனடியாக அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் குடிசைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ராமதாஸ் தலைமையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடிசைகளில் எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் 13 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீட்டில் இருந்த துணிமணிகள், பணம், பள்ளி சான்றிதழ்கள், ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின. 3 வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.

நகை, பணம் நாசம்

தீ விபத்து ஏற்பட்ட வீடுகளில் வசித்தவர்கள் மின் தடையால் கடற்கரையில் சென்று தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீசார், தீ விபத்தின்போது ஆபத்தை உணராமல் அங்கு நின்று ‘செல்பி’ எடுத்தவர்களையும், வேடிக்கை பார்த்தவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஆக்னேட் மாறன் என்பவரது மகளுக்கு 6 மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக வீட்டில் வைத்து இருந்த ரூ.1½ லட்சம், 15 பவுன் நகைகள் தீயில் எரிந்து நாசமானதால் தனது மகளின் திருமணத்தை எப்படி நடத்துவது என அவர் கண்ணீர் விட்டு கதறினார்.

அமைச்சர் ஆறுதல்

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், கடற்கரை மணல் பகுதியில் தற்காலிகமாக தார்பாய் கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் நேற்று காலை உணவு மற்றும் குடிதண்ணீர் வழங்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார், மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோர் நேரில் சென்று தீ விபத்தில் நாசமான குடிசைகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story