பழனி அருகே, சொத்து தகராறில், ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை - தம்பிகள் போலீசில் சரண்


பழனி அருகே, சொத்து தகராறில், ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை - தம்பிகள் போலீசில் சரண்
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

பழனி அருகே சொத்து தகராறில் ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பிகள் போலீசில் சரண் அடைந்தனர்.

பழனி,

பழனியை அடுத்துள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 45). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய தம்பிகள் கமர்தீன் (40), ஜாகீர்உசேன் (38). இந்தநிலையில் தாஜூதீனுக்கும், அவரின் தம்பிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு கமர்தீன், ஜாகீர்உசேன் ஆகியோருக்கும், தாஜூதீனுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது அண்ணன் என்று கூட பாராமல் தாஜூதீனை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் தாஜூதீன் சரிந்து விழுந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து அவருடைய உறவினர்கள் தாஜூதீனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தாஜூதீன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்ததும் ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் தாஜூதீனை அவரது தம்பிகளே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் கமர்தீன், ஜாகீர் உசேன் ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினமும் ஆயக்குடி அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டார். தற்போது சொத்து தகராறில் ஓட்டல் உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆயக்குடி பகுதியில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story