தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி, ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி, ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, 

ஈரோடு, சேலம் பகுதிகளில் ரெயில் நிலையங்களில் இரவு நேரங்களில் சிக்னல் அருகே ஓடும் ரெயிலில் பயணிகளிடம் மர்ம நபர்கள் தொடர்ச்சியாக நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ரெயில் பயணிகள் பீதி அடைந்தனர். இதுதொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீசில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நகை கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு, டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் ஆகியோர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரெயில் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே ஹோம் சிக்னல் அருகே 4 மர்ம நபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை ரெயில்வே தனிப்படையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ரெயில்வே பயணிகளை தொடர்ச்சியாக குறி வைத்து நகை கொள்ளையடித்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் நேற்று கோவை ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு ரெயில் நிலைய பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து உள்ளோம். அவர்கள் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்த பாலாஜி சங்கர் சின்டே என்கிற ஹோண்டி (வயது 50), தானாஜீ மன்மத் சின்டே (20), சுனில் மன்மத் சின்டே (21), பப்பு ஈஸ்வர் பவர் (25) ஆவர்.

இந்த பகுதியில் இவர்கள் 53 பவுன் நகைகள் கொள்ளையடித்ததாக 12 வழக்குகள் உள்ளன. அவர்களிடம் விரைவில் நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்படும். கைதான 4 பேரும் உறவினர்கள். இவர்கள் குடும்பமாக ரெயில்களில் நாடு முழுவதும் பயணம் செய்து பெண்கள் மற்றும் குழந்தைகளை ரெயில் நிலையம் அருகே தங்க வைத்து விட்டு இரவு நேரங்களில் இதுபோன்ற நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் இவர்கள் சொந்த ஊரில் நாடோடிகளாக வாழ்ந்து வருவதும், பகலில் பிச்சை எடுப்பது போல் நடித்து, இரவு நேரங்களில் சேலம், ஈரோடு பகுதிகளில் நகைகளை திருடி வந்து உள்ளனர்.

குறிப்பாக ஈரோடு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் மார்க்கத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பகல் நேரங்களில் வரும் இவர்கள் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகள், சிக்னலில் ரெயில்கள் நிற்கும் இடங்கள் மற்றும் குறைந்த வேகத்தில் ரெயில்கள் செல்லும் இடங்கள் ஆகிய தகவல்களை தனித்தனியாக பிரிந்து சென்று சேகரிப்பார்கள்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எந்த இடத்தில் எவ்வாறு கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து திட்டமிடுவார்கள். இந்த கும்பல் நகை கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாக நல்ல திடகாத்திரமான இளைஞரின் தோள் மீது மற்றொருவர் அமர்ந்து கொள்வார். ரெயில் மெதுவாக செல்லும் இடத்தில் ரெயில் செல்லும் வேகத்துக்கு ஓடிச்சென்று ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கும் பெண்கள் அணிந்து உள்ள நகைகளை கொள்ளையடிப்பார்கள்.

இதுதவிர சிக்னல்களை ‘ஹேக்’ செய்து ரெயிலை நிறுத்துவது, ரெயில் பெட்டியில் உள்ள சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் இவர்கள் நகை கொள்ளை அடித்து வந்துள்ளனர். ரெயிலில் பயணம் செய்யும்போது பெண்கள் அணிந்து உள்ள நகைகள் மற்றும் உடமைகளை பறித்து விட்டு ரெயில் மெதுவாக செல்லும்போது கீழே குதித்து தப்பித்து அருகில் உள்ள ரோட்டிற்கு சென்று பஸ் மூலம் சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள்.

இவர்களை பிடிக்க முற்படும் பொதுமக்களையும், போலீசார் உள்ளிட்டோரை ரெயில் பாதையில் உள்ள கற்களை கொண்டு எறிந்து கொடூரமாக தாக்கி விரட்டியடிக்கும் பழக்கம் உடையவர்கள். கடந்த 4-ந் தேதி இவர்களை பிடிக்க முயன்ற ரெயில்வே போலீசாரை இதேபோன்று கல்லால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி சங்கர் சின்டே என்பவர் ஓடும் ரெயிலில் நகை பறிப்பு சம்பத்தில் ஈடுபட்ட போது ரெயில் சக்கரத்தில் சிக்கி வலது கால் துண்டாகி உள்ளது. இந்த கும்பல் ஒருமுறை திருட வந்தால் குறைந்தது 100 பவுன் நகைகளை கொள்ளையடிக்காமல் ஊர்களுக்கு திரும்பி செல்வது இல்லை.

இந்த கும்பலை பிடிக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் இதுபோன்று வேறு எந்தெந்த பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரியவரும்.

இவர்கள் தமிழகம் தவிர ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்று நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ரெயில் பயணத்தின் போது சந்தேக நபர்கள் குறித்து தெரிய வந்தால் அவர்களை புகைப்படம் எடுத்து 99625 00500 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம். மேலும் 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கோவை ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் ரெயில்வே போலீசார் உடன் இருந்தனர்.

Next Story