ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 257 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 257 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 18 May 2019 11:15 PM GMT (Updated: 18 May 2019 8:14 PM GMT)

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 257 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர்களால் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 80 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள், 16 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, தொகுதி முழுவதும் மொத்தம் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 71 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 54 வாக்குச்சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவ படையினரும், மற்ற 17 வாக்குச்சாவடிகளில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 2 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 143 வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும். வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தொடர்ந்து அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இதேபோன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக மொத்தம் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் நேற்று முன்தினம் இரவு வாக்குச்சாவடி பணியிடம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில் எட்டயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த இறுதிக்கட்ட பயிற்சியின்போது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணியாளர்கள் அனைவரும் தாங்கள் பணி நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை கொண்டு செல்வதற்காக 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கண்காணிப்பாளர் தலைமையில், உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள், மத்திய துணை ராணுவ படையினர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் நேற்று ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டனர்.

இதில் வாக்குப்பதிவு எந்திரம், சீல்கள் உள்ளிட்ட 19 பொருட்கள், 13 வகையான படிவங்கள், 25 வகையான கவர்கள், 6 வகை போர்டுகள், பேனா, பென்சில், மை, மெழுகுவர்த்தி உள்ளிட்ட 19 பொருட்கள் உள்பட மொத்தம் 107 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனியாக சாக்குப்பையில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன.

ஓட்டுப்பதிவுக்காக மொத்தம் 350 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம், வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரம், ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. மீதம் உள்ள எந்திரங்கள், ஏதேனும் எந்திரம் பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 மத்திய துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் உள்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 46 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 50 அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தொகுதிக்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியில் இருந்து, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. 6 மணிக்கு மேல் ஓட்டு போட வாக்குச்சாவடியில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெறும்.

ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்க வசதியாக, அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சக்கர நாற்காலியும் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக, தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தல் பணியில் போலீசார், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட மொத்தம் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story