அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 250 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 250 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 19 May 2019 4:30 AM IST (Updated: 19 May 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 250 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் ஆண்கள் 99 ஆயிரத்து 052, பெண்கள் 1 லட்சத்து 06 ஆயிரத்து 219, இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 2 லட்சத்து 05 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமானவையாக 29 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று நபர்கள் என தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 63 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், வாக்கு எண்ணும் மையத்தில் 4 பேலட் யூனிட்கள் (பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தும் எந்திரம்), ஒரு கண்ட்ரோல் யூனிட் (வாக்குப்பதிவினை கட்டுக்குள் வைத்திருக்கும் எந்திரம்), யாருக்கும் வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான வி.வி.பேட் எந்திரம் ஆகியவை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலிருந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்குத்தேவையான பொருட்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரவக்குறிச்சி தொகுதியிலுள்ள 250 வாக்குச்சாடிவகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக மொத்தம் (கூடுதல் கருவிகளும் சேர்த்து) 300 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 1,200 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களும், 325 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 250 வாக்குச்சாவடி மையங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவுள்ளது.

மேலும் 3 கம்பெனியைச்சேர்ந்த 192 துணை ராணுவப்படையினரும், கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 552 காவலர்கள் மற்றும் இதர மாவட்டங்களைச்சேர்ந்த 1,070 காவலர்கள் என மொத்தம் 1,622 காவலர்களும், 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்களும், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 45 புகார்களும் வரப்பெற்றுள்ளது. அனைத்து புகார்களின் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுவரை, உரிய ஆணவங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதற்காக ரூ.4½ லட்சம் ரொக்கமும், 70 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.2½ லட்சம் ரொக்கம் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story