மங்கலம்பேட்டையில், ஏஜென்சி நடத்துபவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி - வாலிபர் கைது


மங்கலம்பேட்டையில், ஏஜென்சி நடத்துபவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 May 2019 10:45 PM GMT (Updated: 18 May 2019 10:06 PM GMT)

மங்கலம்பேட்டையில் ஏஜென்சி நடத்துபவரிடம் ரூ.50 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் சாதிக் அலி(வயது 49). இவர் வெளிநாட்டிற்கு விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருப்பூர் பேயம்பாளையத்தை சேர்ந்த முகமது அனிபா மகன் பர்கத் அலி(27) என்பவர் போன் மூலம் சாதிக் அலியை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிவதாகவும், தற்போது ஜெர்மனி நாட்டில் இருப்பதாகவும், தன்னுடைய மகன் ஜெர்மனியில் பணிபுரிவதால், அவரை உடன் அழைத்து வர வேண்டி உள்ளது. எனவே டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து சாதிக் அலி ரூ.10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மீண்டும் சாதிக் அலியை தொடர்பு கொண்ட பர்கத் அலி, தன்னுடைய நண்பரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே தனக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் அனுப்பி விடுமாறும், தான் இந்தியா வந்தவுடன் பணத்தை தந்து விடுவதாகவும், ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துள்ளார். இதை நம்பிய சாதிக் அலி ரூ.20 ஆயிரத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து மீண்டும் சாதிக்அலியை தொடர்பு கொண்ட பர்கத் அலி, தனது நண்பரின் குழந்தை இறந்து விட்டதாகவும், அந்த குழந்தையின் உடலை எடுத்துவர மேலும் ரூ.20 ஆயிரம் தேவைப்படுகிறது எனவும் கேட்டு, மற்றொரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பியுள்ளார். இதை யடுத்து ரூ.20 ஆயிரத்தை சாதிக் அலி அனுப்பியுள் ளார்.

இருவேறு வங்கி கணக்குகளை கொடுத்ததால் சந்தேகமடைந்த சாதிக் அலி மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்ட ராக பர்கத் அலி பணி புரிகிறாரா? என்று விசாரித் துள்ளார். அப்போது மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பர்கத் அலி டாக்டராக பணிபுரியவில்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பின்னர் இதுபற்றி சாதிக் அலி மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் பர்கத் அலி குறித்து விசாரணை நடத்தி அவரின் புகைப்படத்தை வைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் பில்லூர் சாலை வழியாக வந்த பஸ்சை சோதனை செய்தபோது, அதில் பர்கத் அலி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பர்கத் அலி இதேபோல பல்வேறு டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துபவர்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பர்கத் அலியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story