கால்பிரிவு கிராமத்தில், பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சேதம்


கால்பிரிவு கிராமத்தில், பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 10:06 PM GMT)

கால்பிரிவு கிராமத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்து சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் வாழைகள் சாய்ந்து பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. மானாமதுரையைச் சுற்றிலும் கால்பிரிவு, முத்தனேந்தல், அன்னியேந்தல், மேலநெட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அதில் நாட்டு வாழை, ஒட்டு வாழை, முப்பட்டை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இருந்தாலும் விவசாயிகள் பெரும்பாலும் ஒட்டு வாழை, முப்பட்டை வாழைகளையே பயிரிடுகின்றனர்.

ஏக்கருக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 200 கன்றுகள் வரை நடவு செய்கின்றனர். நடவு செய்யப்பட்ட ஒரு வருடத்தில் வாழை காய்கள் விளைச்சலுக்கு வந்து விடும், வாழை தார் வெட்டி முடிந்தவுடன் வாரத்திற்கு ஒரு முறை வாழை இலை அறுவடை நடைபெறும். ஒரு வெட்டுக்கு 2 ஆயிரம் இலைகள் வரை கிடைக்கும். ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.

வாழை அறுவடை செய்யும் நிலையில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மானாமதுரையைச் சுற்றிலும் பல இடங்களில் வாழைகள் சாய்ந்து சேதமாகின. குறிப்பாக கால்பிரிவு கிராமத்தில் வாழைக்காய்கள் வளர்ச்சியடையும் நேரத்தில் வாழைகள் விழுந்ததால் விவசாயிகள் பலத்த நஷ்டமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கால்பிரிவில் முப்பட்டை வாழை பயிரிடப்பட்டிருந்தது. ஆனால் பலத்த சூறைக்காற்று காரணமாக வாழைகள் சாய்ந்த சேதமானதால், ஏக்கருக்கு 1½ லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வருவாய்துறையினர், வேளான் துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. விவசாயிகள் பலரும் வட்டிக்கு வாங்கி வாழை பயிரிட்டுள்ளனர்.

பெரும்பாலும் கிணற்று பாசன விவசாயிகள் மட்டுமே வாழையை பயிரிட்டுள்ளனர். அறுவடை சமயத்தில் வாழைகள் சேதமானதால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

Next Story