வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அலுவலர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு செல்ல கூடாது


வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அலுவலர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு செல்ல கூடாது
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 6:41 PM GMT)

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அலுவலர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு செல்ல கூடாது என திருவாரூரில் நடந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக முன்கூட்டியே காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கண்டிப்பாக செல்போன் கொண்டு செல்ல கூடாது. ஓவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 17 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 17 உதவி அலுவலர்கள், 17 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காகவும், திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காகவும் மொத்தம் 357 அலுவலர்களும், வாக்கு எண்ணிக்கை மைய இதர பணிக்களுக்காக 372 அலுவலர்களும் ஆக மொத்தம் 729 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும் வேட்பாளர் தரப்பில் ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டிருப்பார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைகாக 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுமையாக கண்காணிக்கப்படும். இப்பயிற்சி வகுப்பினை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அம்பாயிரநாதன், தனி தாசில்தார் (தேர்தல்) சொக்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story