அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையம் சென்னைக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும் 8 பிளாட்பாரங்கள் கொண்ட பெரிய ரெயில் நிலையம் ஆகும். தினமும் இந்த வழியாக நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருகிறது.
மேலும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் சென்னை, காட்பாடி, காஞ்சீபுரம், ரேணிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரக்கோணம் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்க பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாட்பாரம் நீட்டிப்பு மற்றும் லிப்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விரிவாக்கப்பட்ட பிளாட்பாரத்தில் மேற்கூரை அமைக்கப்படவில்லை.
ரெயில் நிலையத்தில் 1,2-வது பிளாட்பாரங்கள் 26 ரெயில் பெட்டிகள் நிற்கும் வகையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரக்கோணம் வழியாக செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இந்த 2 பிளாட்பாரங்கள் வழியாக சென்று வருகிறது. மிகவும் நீளமான பிளாட்பாரமாக இருப்பதால் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து மேம்பாலம் ஏறி ரெயிலை பிடிப்பதற்குள் போதும், போதும் என்று ஆகி விடுகிறது.
மேம்பாலத்தில் இருந்து இறங்கி ரெயிலை பிடிக்க நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. பிளாட்பாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் வசதிகளுக்காக பிளாட்பாரங்களில் பேட்டரி கார்களை இயக்கி பயணிகளுக்கு சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரக்கோணம் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் பயணிகள் டிக்கெட் எடுக்க குவிந்து விடுகின்றனர். ரெயில் நிலையத்தில் 5 கவுண்ட்டர்கள் உள்ளது. இதில் சில கவுண்ட்டர்கள் மட்டுமே இயங்குவதால் பயணிகள் குறித்த நேரத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு ரெயிலை பிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆகவே சில பயணிகள் அவசரத்தில் டிக்கெட் எடுக்க முடியாமல் ரெயிலில் ஏறி சென்று விடுகின்றனர். இதனால் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கி அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே ரெயில் நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் டிக்கெட் வழங்கும் இடத்தில் கூடுதலாக கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும்.
பிளாட்பாரங்களில் ஆங்காங்கே ரெயில்வே நிர்வாகம் குறைந்த விலையில் குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால் டிக்கெட் வழங்கும் இடத்தில் குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை. ஆகவே டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ள இடத்தில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பறை உள்ளது. வேறு எந்த பகுதியிலும் போதுமான கழிப்பறைகள் இல்லை. இதனால் முதல் பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள் கழிப்பறைக்கு செல்ல வேண்டுமானால் நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
ரெயில் நிலையத்தில் உள்ள 8 பிளாட்பாரங்களிலும் பயணிகளின் வசதிகளுக்காக கூடுதல் கட்டண, இலவச கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிகளுக்காக செய்யும் ஒவ்வொரு பணியும் எளிதில் பயணிகளை சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story