அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக செந்தில்பாலாஜி புகார்


அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக செந்தில்பாலாஜி புகார்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 7:58 PM GMT)

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக செந்தில்பாலாஜி புகார் கூறினார்.

நொய்யல்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் டி.என்.பி.எல். சாலையில் உள்ள காந்தியார் நடுநிலைப்பள்ளியில் 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று காலையிலிருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர்.

மதியம் 12 மணியளவில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி அந்த வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் சிலர், தாங்கள் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வெளியே வீட்டின் அருகே நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தோம். அங்கு வந்த போலீசார், எங்களை அங்கு அமரக்கூடாது என்று கூறி அனுப்பிவிட்டதாக, அவரிடம் முறையிட்டனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

உடனே, செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க.வினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இதுகுறித்து கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தி.மு.க.வினரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுக்கவில்லை

அரவக்குறிச்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடக்கவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகின்றனர். வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு தள்ளி பட்டா நிலத்தில் அமர்ந்திருந்த எங்களது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரை கலைந்து செல்ல போலீசார் கூறியுள்ளனர். வீட்டுக்குள் போய் உட்கார சொல்கின்றனர். இங்கு என்ன 144 தடை உத்தரவா போடப்பட்டுள்ளது? தேர்தல் விதியை மீறி ஆளுங்கட்சியினர் பிளக்ஸ் பேனரில் அரசியல் கட்சி தலைவர்கள் படத்தை பயன்படுத்துகின்றனர். நாங்கள் யாரையும் வாக்களிக்க விடாமல் தடுக்கவில்லை. எங்கள் மீது குற்றம் சுமத்துகிறவர்கள் தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story