நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை விவகாரம்: 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு


நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை விவகாரம்: 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 8:42 PM GMT)

நாகர்கோவிலில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). இவரும், இவருடைய மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) மற்றும் தாயார் ருக்குமணி (72) ஆகியோரும் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தில் 4 பேரும் தற்கொலை செய்து வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

சுப்பிரமணியன் குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்கு மூலக்காரணம் கடன் தொல்லை என்று கூறப்படுகிறது. அதாவது தொழில் அதிபரான சுப்பிரமணியன் ஒரு ஏஜென்சி நடத்தி வந்தார். அதன் மூலம் திண்பண்டங்களை மொத்தமாக வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்தார். ஆனால் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். எனினும் நஷ்டத்தை அவரால் சரிக்கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கடன் பிரச்சினை

இதற்கிடையே அவருடைய மகள் ஷிவானி தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வந்ததால் படிப்பு செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டு இருக்கிறது. எனவே தான் சுப்பிரமணியன் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் யார்? யாரிடம் பணம் வாங்கினார்? எவ்வளவு தொகை வாங்கினார்? அதற்கு எவ்வளவு வட்டி கேட்டார்கள்? என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சுப்பிரமணியன் வீடு கட்டியதிலும் கடன் ஏற்பட்டு இருக்கிறது.

இப்படியே கடனுக்கு மேல் கடனில் மூழ்கிய சுப்பிரமணியனால் அதில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. இதனால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ் அதிகாரி தகவல்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தொழில் செய்து வந்த சுப்பிரமணியன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் வங்கிகளிலும், பல வெளி நபர்களிடமும் கடன் வாங்கி அதற்கு வட்டி கட்ட இயலாமல் சிரமப்பட்டது தெரியவந்தது. இதை வைத்து பார்க்கும்போது கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். எனவே சுப்பிரமணியன் யார் யாரிடம் இருந்து கடன் வாங்கினார்? என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுப்பிரமணியனின் செல்போனையும் கைப்பற்றி உள்ளோம். ஆனால் செல்போனில் பாஸ்வேர்டு போடப்பட்டு உள்ளது. இதனால் சுப்பிரமணியன் யாரிடம் அதிகமாக பேசினார்? என்பதை கண்டுபிடிக்க தாமதம் ஆகிவருகிறது. அதே போல 4 பேரும் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்திய விஷம் எந்த வகையை சேர்ந்தது? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 பேரின் உடல்களில் விஷம் பாதிக்கப்பட்ட உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக நெல்லை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனை முடிவு வந்தால் தான் எந்த விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவரும்“ என்றார்.

பிரேத பரிசோதனை

இதற்கிடையே சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மனைவி, மகள் மற்றும் தாயார் ஆகியோரின் உடல்கள் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல்களை வாங்க உறவினர்கள் சோகத்துடன் பிணவறை முன் காத்திருந்தார்கள். ஷிவானியுடன் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகளும் கண்கலங்கிய நிலையில் இருந்ததை காண முடிந்தது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு செய்வதற்காக உடல்களை உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

Next Story