பணியிடங்களில் வடமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு: ரெயில்வே துறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை


பணியிடங்களில் வடமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு: ரெயில்வே துறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 9:05 PM GMT)

ரெயில்வே பணியிடங்களில் வட மாநிலத்தவரே ஆக்கிரமித்து வருவதால் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், 

தென்னக ரெயில்வேயில் பல்வேறு நிலைகளில் ஒரு லட்சத்துக்கும் மேல் பணியிடங்கள் உள்ளன. இதில் 35 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் இருந்து வந்தனர். சமீப காலங்களில் நடந்த ரெயில்வே காலி பணியிடங்களுக்கான தேர்வுகளில் வட மாநிலத்தவரே அதிகம் தேர்ச்சி பெற்று ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ரெயில்வே தேர்வில் 98 சதவீதம் பேர் வட மாநிலத்தவரே தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தேர்ச்சி பெற்ற 2 சதவீத பேரில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரெயில்வே பணியிடங்களில் ரெயில் போக்குவரத்தை கையாளும் பணிகளில் 3,197 ரெயில் நிலைய மேலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ரெயில் இயக்கம், சிக்னல் உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் பொறுப்பு இவர்களிடமே இருந்து வருகிறது தற்போதுள்ள நிலையில் ரெயில் நிலைய மேலாளர்கள் பணியிடங்களில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். ரெயில்வே மந்திரியாக லல்லு பிரசாத் யாதவ் இருந்தபோது பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறை தற்போதும் ரெயில்வே தேர்வுகளில் தொடருவதாலேயே வட மாநிலத்தவர் அதிகம் தேர்ச்சி பெறும் நிலை இருப்பதாக ரெயில்வே தொழிற்சங்க பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

ரெயில் நிலைய பொறுப்பில் வட மாநிலத்தவர் இருப்பதால் ரெயில் இயக்கத்திலும் ரெயில் பயணிகளுக்கும் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கடந்த 9-ந் தேதி திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே ரெயில் பாதையில் எதிர் எதிரே செங்கோட்டை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டதற்கு காரணம் இதுவே என்றும் சொல்லப்பட்டது. விருதுநகர்-மானாமதுரை இடையே உள்ள அகல ரெயில் பாதையில் திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வட மாநிலத்தவரே நிலைய பொறுப்புகளில் இருப்பதால் பயணிகளுக்கு முறையான தகவல் கிடைக்காத நிலையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் ரெயில்வே தேர்வு எழுதினாலும் அவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலையில் தேர்வு எழுதும் வட மாநில இளைஞர்களே தேர்ச்சி பெறுவது ஏன் என்பது புரியாத நிலையிலேயே உள்ளது. பல்வேறு போட்டி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் சராசரியாக தேர்ச்சி பெற்று வரும் நிலையில் ரெயில்வே துறை தேர்வுகளில் மட்டும் அவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் போவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் உள்ளனவா என்பது பற்றி ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இது குறித்து பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்களே தவிர இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க முயற்சிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

எனவே இனியாவது ரெயில்வே துறை தேர்வுகள் அகில இந்திய அளவில் நடத்தப்பட்டாலும் குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு எழுதும் அந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வு முறையில் உடனடியாக தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம்தான் முடிவெடுக்க வேண்டியது உள்ளதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தமிழக எம்.பி.க்கள் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண குரல் கொடுக்கவேண்டியது அவசியம் ஆகும்.

Next Story