தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 9:07 PM GMT)

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் இந்த வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்கு காரணம் காட்டவே மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் புகார் அளித்தனர். இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக வாக்காளர்களோ, வாக்குச்சாவடி முகவர்களோ, தேர்தல் பிரிவு அதிகாரிகளோ புகார் அளிக்கவில்லை. ஆனால் இங்கு தேவையற்ற மறுஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பா.ம.க.விற்கு முழுமையாக ஓட்டளித்து இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் மறுஓட்டுப்பதிவு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு அரசியல் தெரியாது. அவரை மக்கள் ஏற்கவில்லை.

கனவு நிறைவேறாது

பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த நாளில் இருந்து எங்களை தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் பேசினார். முதலில் ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று கூறிய அவர், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது தேர்தல் முடிந்த பின்னர் பிரதமரை முடிவு செய்வோம் என்றார். பின்னர் மீண்டும் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று கூறினார்.

இந்தநிலையில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சந்தித்தபோது அவரிடம் 1 மணிநேரம் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பா.ஜனதாவுடனும் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தோல்வி பயம் வந்து விட்டதால் அவர் குழப்பத்தில் இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என்ற அவருடைய கனவு எப்போதும் நிறைவேறப்போவது இல்லை.

அமோக வெற்றி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க.வும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வும் அமோக வெற்றி பெறும். இதேபோல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலுச்சாமி அ.தி.மு.க. நிர்வாகி மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story