ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நடுகற்கள் கண்டெடுப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நடுகற்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 May 2019 4:15 AM IST (Updated: 20 May 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக இளைஞர்கள் முதுமக்கள் தாழிகள் மற்றும் நடு கற்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சுரைக்காய்ப்பட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புலி குத்தி வீரரின் நடு கல் கண்டறியப்பட்டுள்ளது.

வனம் சார்ந்த பகுதியில் வேட்டைக்கு செல்லும் வீரர் புலியை குத்துக்கம்பால் குத்தும்போது புலி வலி தாங்காமல் வாயை திறப்பதை போல நடு கல்லில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அணியும் உடையும், அதில் குறுவாளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் அள்ளி முடிந்த கொண்டையிட்ட 3 பெண்கள் நிற்கின்றனர். அது அந்த வீரரின் மனைவிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதனருகில், நின்று வணங்குவது போல மற்றொரு நடுகல் உள்ளது. இது மன்னர் போல தோற்றமளிக்கிறது. கழுத்தில் மணிமாலைகள், இடுப்பின் இடது பகுதியில் குறுவாளுடன் இடது பக்கம் அள்ளி முடித்து கொண்டையிட்டுள்ளார். ஒரே கல்லில் கணவரும் இடது, வலது புறங்களில் மனைவிகளும் உள்ள காட்சி மூலம் இந்த மன்னனுக்கு 2 மனைவிகள் என்பதை விளக்குகிறது. புலி குத்தி வீரனை வணங்கும் விதமாக இதனை காட்சியமைத்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் கல் மண்டபமும் உள்ளது. இவை 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவை சிதிலமடைந்து காணப்படுவதால் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story