நாமக்கல்லில் மாநில சிலம்ப போட்டி 823 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு


நாமக்கல்லில் மாநில சிலம்ப போட்டி 823 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 9:29 PM GMT)

நாமக்கல்லில் நேற்று நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 823 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக்கலையை மீட்டெடுக்கும் விதமாக பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் நாமக்கல், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 823 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழா

இதையொட்டி மான்கொம்பு, ஆயுத விளையாட்டு, சுருள் வீச்சு, போர் சிலம்பம், அலங்கார சிலம்பம், புலி ஆட்டம் உள்ளிட்ட 16 வகையான சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் செயலாளர் யதாத்மானந்தர் தலைமை தாங்கினார். பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளி கவுரவ தலைவர் சண்முகம், டாக்டர்கள் எழில் செல்வன், அருண், மத்திய அரசு வக்கீல் மனோகரன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கேசவன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழு வாரியாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த குழுக்களுக்கு நாமக்கல் மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் விஜயகுமார் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற குழுக்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சிப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story