தெலுங்கானா முதல்-மந்திரியை சந்தித்தது தவறு: ‘மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்’ தங்கதமிழ்செல்வன் கடும் தாக்கு


தெலுங்கானா முதல்-மந்திரியை சந்தித்தது தவறு: ‘மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்’ தங்கதமிழ்செல்வன் கடும் தாக்கு
x
தினத்தந்தி 19 May 2019 10:15 PM GMT (Updated: 19 May 2019 9:46 PM GMT)

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவை சந்தித்தது தவறு என்றும், மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் தங்கதமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.

தேனி,

அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளருமான தங்கதமிழ்செல்வன் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று யாரும் புகார் அளிக்காத நிலையில், தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. முதல் நாளில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்ட நிலையில் என்ன காரணம் என்று கேட்டபோது தெரியவில்லை என்றனர். அடுத்த நாளில் மறுவாக்குப்பதிவு என்று அறிவித்தனர்.

பா.ஜ.க.வுடன் வாழ்நாளில் கூட்டணி இல்லை என்று எங்களின் நிலைப்பாட்டை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெளிவாக கூறிவிட்டார். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என்று மு.க.ஸ்டாலின் ஒருவர் தான் அறிவித்தார்.

கூட்டணி கட்சி தலைவர் களோ, காங்கிரஸ் கட்சி தலைவர்களோ அறிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடியும் தருணத்தில் தெலுங் கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவை மு.க.ஸ்டாலின் சந்தித்தது மிகப்பெரிய தவறு.

நாங்கள் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறோம். மு.க.ஸ்டாலின் தான் இரட்டை வேடம் போடுகிறார். அவர் போடும் இரட்டை வேடத்தை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க 100 சதவீதம் ஆதரவு கொடுக்க மாட்டோம்.

நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் இந்த துரோக அ.தி.மு.க. ஆட்சியை கலைப்பது தான் எங்களின் முதல் வேலை. சட்டமன்றத்தில் இந்த ஆட்சியை கலைப்பதற்கு தான் ஓட்டுபோடுவோம். தி.மு.க. எப்படி ஓட்டுபோடும்? காங்கிரஸ் எப்படி ஓட்டுப்போடும்? என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் யாருக்கும் துணை போக மாட்டோம்.

எங்களின் முடிவுக்கு தி.மு.க. ஆதரித்து ஓட்டுப்போட்டால் சந்தோஷம். அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக தி.மு.க. ஓட்டுப் போட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அடுத்து வரும் தேர்தலை சந்தித்துக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜ.க. இல்லாத மதசார்பற்ற கூட்டணிக்கு தான் ஆதரவு என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அப்படி தான் எங்கள் அணி செல்லும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் களுக்கு ரூ.1,000, ரூ.2,000 வீதம் ரூ.300 கோடி அளவுக்கு அ.தி.மு.க. பணம் கொடுத்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை எம்.எல்.ஏ. ஆக்கும் போது அவர் சாதாரண மனிதர். இன்றைக்கு அதே குடும்பம் அவருடைய மகனுக்கு ரூ.300 கோடி செலவு செய்கிறது என்றால் வியப்பாக உள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story