காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்றவர் பாலத்தில் மோதி சாவு


காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்றவர் பாலத்தில் மோதி சாவு
x
தினத்தந்தி 20 May 2019 4:15 AM IST (Updated: 20 May 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றியை வேட்டையாடி அதை மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்ற வாலிபரை வனஊழியர் துரத்தினார். அப்போது வேகமாக சென்ற வாலிபர் பாலத்தில் மோதி இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி,

பவானிசாகர் வனப்பகுதி வேட்டை தடுப்பு காவலர் லலித்குமார் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் காட்டுப்பன்றியை வேட்டையாடிவிட்டு, அதை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வன ஊழியர் நிற்பதை கண்டதும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு தப்பி சென்றார். உடனே லலித்குமார் அந்த வாலிபரை மோட்டார்சைக்கிளில் விரட்டி சென்றார். சத்தியமங்கலம் அருகே ராஜன் நகர் பகுதியில் வேகமாக சென்றபோது சாலையோரத்தில் இருந்த பாலத்தின் சுவரில் வாலிபர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது.

நாட்டு வெடிகுண்டு வெடித்தது

அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மற்றும் அந்த வாலிபர் வேட்டையாடுவதற்காக பையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளும் வெடித்தன. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவரை விரட்டி வந்த வேட்டை தடுப்பு காவலர் லலித்குமாரின் மோட்டார் சைக்கிளும் அதே பகுதியில் உள்ள மற்றொரு பாலத்தில் மோதியது. இதில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர் பரிதாபமாக இறந்தார். லலித்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்த வாலிபர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கணக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 20) என்பதும், இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவி உள்ளதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story