வில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறு போலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது
வில்லியனூரில் கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த போது மடக்கிப் பிடிக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் அண்ணா சிலை அருகே அண்ணன்-தம்பிகளான சண்முகம், சிவா ஆகியோர் மளிகைக் கடை நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை இரவு வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ரவுடி சாந்தமூர்த்தி என்பவர் குடிபோதையில் அங்கு சென்று கடைக்காரரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட கடை ஊழியர்களை சாந்தமூர்த்தி தாக்கினார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த சாந்தமூர்த்தியை பிடிக்கச் சென்றனர். ஆனால் போலீசாரையும் அவர் ஆபாசமாக திட்டி, தாக்கினார். அப்போது அந்த கடைக்கு வந்த காங்கிரஸ் பிரமுகர் சம்பத், கோனேரிக்குப்பம் தாமோதரன் ஆகியோர் போலீசாரிடம் சமரசம் செய்தனர். சாந்தமூர்த்தியை நாங்களே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருகிறோம் என கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் அங்கிருந்து சாந்தமூர்த்தி தப்பிஓடி விட்டார்.
இதுகுறித்து போலீஸ் ஏட்டு பாஸ்கரன், போலீஸ்காரர் கவுசன் ஆகியோர் ரவுடி சாந்தமூர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சம்பத், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், தாக்குதலுக்கு உடந்தையாக இருத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாந்தமூர்த்தி, சம்பத், தாமோதரன் மீது வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய சாந்தமூர்த்தியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த ரவுடி சாந்தமூர்த்தி, அவரது அண்ணன் சம்பத் ஆகியோரை வில்லியனூர் குற்றப்பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன், ஏட்டு எழில்ராஜ் மற்றும் அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தாமோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story