வறட்சியால் வரத்து குறைவு: காய்கறி விலை 20 சதவீதம் உயர்வு கொத்தமல்லி, கீரை விலை 2 மடங்கு அதிகரிப்பு


வறட்சியால் வரத்து குறைவு: காய்கறி விலை 20 சதவீதம் உயர்வு கொத்தமல்லி, கீரை விலை 2 மடங்கு அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 May 2019 10:00 PM GMT (Updated: 20 May 2019 3:44 PM GMT)

வறட்சி காரணமாக வரத்து குறைந்துள்ளதால் காய்கறி விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கொத்தமல்லி, கீரை வகைகளின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் கடுமையான வறட்சி நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துகொண்டே செல்கிறது.

குறிப்பாக கொத்தமல்லி, கீரை வகைகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகளுக்கு இலவசமாக கொத்தமல்லி, கறிவேப்பிலை வழங்குவதை சில வியாபாரிகள் நிறுத்தியுள்ளனர். காய்கறி விலை உயர்வு மாத பட்ஜெட் போட்டு செலவு செய்யும் குடும்ப தலைவிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதச்செலவுக்கு என்று ஒதுக்கும் தொகையை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மொத்த மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

வறட்சியின் காரணமாக காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 லோடு லாரிகளில் காய்கறி வரும். ஆனால் தற்போது 210 லோடு லாரிகளில் மட்டுமே காய்கறி வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் காய்கறி விலை சராசரியாக 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

அடுத்த மாதம் பள்ளிகள் திறந்த உடன் காய்கறிகளின் தேவைஇன்னும் அதிகரிக்கும். அதனால் காய்கறி விலை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதே தவிர, குறைவதற்கு வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் தற்போது இருக்கும் விலையே காய்கறிகளுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். மழை இல்லாத சூழல் இருப்பதால் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்து, விவசாயம் செழித்தால் தான் காய்கறி விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி காய்கறி விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

பீன்ஸ் ரூ.100 (ரூ.90), சவ்சவ் ரூ.30 (ரூ.25), அவரைக்காய் ரூ.55 (ரூ.50), முட்டைகோஸ் ரூ.30 (ரூ.25 முதல் ரூ.30 வரை), வெங்காயம் ரூ.25 (ரூ.30), சாம்பார் வெங்காயம் ரூ.45 (ரூ.40), தக்காளி ரூ.45 (ரூ.30), கேரட் ரூ.50 (ரூ.40), முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை (ரூ.30), பீட்ரூட் ரூ.30 (ரூ.25), பச்சை பட்டாணி ரூ.90 (ரூ.100), மிளகாய் ரூ.40 (ரூ.30),

இஞ்சி ரூ.100 (ரூ.90), வெண்டைக் காய் ரூ.35 முதல் ரூ.40 வரை (ரூ.30), பாகற்காய் ரூ.45 (ரூ.40), காலி பிளவர் ரூ.40 (ரூ.35), கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை (ரூ.10), கீரை வகைகள் ரூ.15 (ரூ.8), எலுமிச்சை பழம் சராசரியான அளவு ஒன்று ரூ.15 (ரூ.5 முதல் ரூ.10 வரை), தேங்காய் ஒன்று ரூ.25 (ரூ.20). (கடந்த வார விலை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது).

Next Story