ராஜஸ்தானை சேர்ந்தவரிடம், ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த வியாபாரி கைது


ராஜஸ்தானை சேர்ந்தவரிடம், ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி - கோவையை சேர்ந்த வியாபாரி கைது
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 6:28 PM GMT)

ராஜஸ்தானை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் அரிசி வாங்கி ரூ.42½ லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்காத் பகுதியை சேர்ந்தவர் சுமித்குப்தா (வயது 45). இவர் ஆன்லைன் மூலம் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வியாபாரத்தை இணையதளத்திலும் விளம்பரம் செய்து இருந்தார். அதை பார்த்த கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வியாபாரி கோபி (38) என்பவர் கடந்த மார்ச் மாதம் சுமித்குப்தாவை தொடர்பு கொண்டார்.

தான் அரிசி வியாபாரம் செய்து வருவதால், தனக்கு 60 டன் பாசுமதி அரிசியை எனது முகவரிக்கு அனுப்பி வையுங் கள் என்று கோபி தனது அலுவலக முகவரியை கொடுத்தார். அதற்கு சுமித்குப்தா, 60 டன் பாசுமதி அரிசியின் விலை ரூ.50½ லட்சம் ஆகும். பணத்தை அனுப்புங்கள் நான் அரிசியை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.

அதற்கு கோபி, முதலில் ரூ.8 லட்சத்தை உங்கள் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தி விடுகிறேன், மீதமுள்ள ரூ.42½ லட்சத்தை அரிசி கிடைத்ததும் அனுப்பி வைத்து விடுகிறேன் என்று உறுதியளித்தார். இதை நம்பிய சுமித்குப்தா உடனே 60 டன் பாசுமதி அரிசியை ராஜஸ்தானில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார்.

அதை பெற்றுக்கொண்ட கோபி, அவருக்கு தகவலையும் தெரிவித்தார். ஆனால் அவருக்கு மீதமுள்ள பணத்தை அனுப்பி வைக்கவில்லை. இது தொடர்பாக சுமித்குப்தா பலமுறை கோபியை தொடர்பு கொண்டு பணம் கேட்டதற்கு உடனடியாக அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் பணத்தை அனுப்பவில்லை.

இதை தொடர்ந்து சுமித்குப்தா நடத்தி வரும் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணகுமார் மேத்தா என்பவர் கோபியின் அலுவலகத்துக்கு சென்று ரூ.42½ லட்சத்தை கேட்டு உள்ளார். அதற்கு கோபி, அவருடைய மனைவி தேவி (35), அலுவலக மேலாளர் சந்தோஷ் (40) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணகுமார் மேத்தாவிடம் பணம் கொடுக்க முடியாது என்று மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப் படுகிறது.

இது குறித்து கிருஷ்ணகுமார் மேத்தா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கோபி உள்பட 3 பேர் மீது மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

மேலும் இது தொடர்பாக கோபியை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபியின் மனைவி தேவி, மேலாளர் சந்தோஷ் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story