தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறும் தேவேகவுடா பேட்டி


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறும் தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 20 May 2019 6:37 PM GMT)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறும் என தேவேகவுடா கூறினார்.

சுந்தரக்கோட்டை,

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடா, அவருடைய மகனும், கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா ஆகியோர் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தேவேகவுடாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோவிலுக்குள் சென்ற தேவேகவுடா, மூலவர் பரவாசுதேவபெருமாள், உற்சவர் ராஜகோபாலசாமி மற்றும் தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து கோவில் வழக்கப்படி அவருக்கு அச்சுதப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர் சிலைகள் முன்பாக செயல் அதிகாரி சங்கீதா மற்றும் அர்ச்சகர்கள் ராஜமரியாதை அளித்தனர்.

பின்னர் தேவேகவுடா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கடமையை நாங்கள் செய்துள்ளோம். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட ஊடகங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் கருத்துக்கணிப்புகள் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் தேவேகவுடாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி கண்காணிப்பு கூட்டங்களை விதிமுறைகளின்படி நடத்த வேண்டும்.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கண்டிப்புடன் செயல்படுத்துவதற்கு உதவ வேண்டும். கர்நாடக மாநில அரசு உபரி நீரை தடுத்து சட்டவிரோதமாக மேகதாதுவில் அணைகட்டும் முடிவை கைவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

தேவேகவுடா வருகையை முன்னிட்டு நேற்று காலை முதலே ராஜகோபாலசாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேவேகவுடா, ரேவண்ணா ஆகியோர் சுமார் ஒரு மணிநேரம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் காரில் கும்பகோணம் புறப்பட்டு சென்றனர்.

Next Story