மண்ணுளி பாம்புகள் விற்பதில் மோதல்; வாலிபர் மீது துப்பாக்கி சூடு கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது


மண்ணுளி பாம்புகள் விற்பதில் மோதல்; வாலிபர் மீது துப்பாக்கி சூடு கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 20 May 2019 7:37 PM GMT)

குளித்தலையில் மண்ணுளி பாம்புகள் விற்பதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை சின்னையம்பாளையம் அருகே உள்ள தாசில்நாயக்கனூரை சேர்ந்தவர் கஞ்சாநாயக்கர் (வயது 50). கன்னல் வடநாயக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் தங்கவேல் (38), ராஜா (40). இவர்கள் 3 பேரும் மண்ணுளி பாம்புகளை விற்கும் இடைத்தரகர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் பள்ளிவில்லா புதன்வீடு பகுதியைச் சேர்ந்த சராப் மகன் முகமது ரபீக் (23) உள்ளிட்ட சிலர் இவர்களிடம் மண்ணுளி பாம்புகளுக்கான பணத்தை ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்துள்ளனர். இருப்பினும் பாம்புகளை அவர்கள் தராத காரணத்தால் அவர்களை நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் முகமதுரபீக் மற்றும் கொல்லம் மாவட்டம் சாந்திபவன் பகுதியை சேர்ந்த சுதாகரன் மகன் விவேக் (22), பள்ளிவில்லா படிஞ்சட்டாகில் பகுதியை சேர்ந்த ஆண்டனி மகன்கள் நித்தின் (23) மற்றும் நித்திஷ் (27), ஆகிய 4 பேரும் காரில் சின்னையம்பாளையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். இந்த காரை கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

சின்னையம்பாளையம் அருகே கலத்துபட்டியில் உள்ள காளையா நாயக்கர் தோட்டத்தில், கஞ்சாநாயக்கர் மற்றும் தங்கவேல் மற்றும் ராஜா ஆகியோரை இவர்கள் சந்தித்துள்ளனர். அப்போது தங்களிடம் பாம்புகள் இல்லையென கஞ்சாநாயக்கர், தங்கவேல், ராஜா ஆகியோர் கூறியதையடுத்து, தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு முகமதுரபீக் உள்ளிட்டோர் கேட்டுள்ளனர். இதில் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கஞ்சாநாயக்கர் மற்றும் ராஜா ஆகியோர் தப்பியோட முயன்றுள்ளனர். தங்கவேல் மட்டும் ஓடாமல் தான் வைத்திருந்த கத்தியால் முகமதுரபீக் உள்ளிட்டோரை தாக்க முயன்றுள்ளார். அப்போது முகமதுரபீக் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் (பிஸ்டல்) அவரை சுட்டபோது, அதிலிருந்து வெளிப்பட்ட குண்டு தங்கவேலின் முதுகில் பாய்ந்தது. இதில் தங்கவேல் காயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த கஞ்சாநாயக்கர் மற்றும் ராஜா ஆகியோர் தங்க வேலுவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் குளித்தலை பகுதி முழுவதும் வாகன சோனையில் ஈடுபட்டனர். அப்போது குளித்தலை அருகே அய்யர்மலை-சிவாயம் பிரிவு சாலையில் பதிவு எண் இல்லாமல் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த காரை ஓட்டிவந்த சுபாஷ் தப்பி ஓடினார். பின்னர் காரில் இருந்த முகமதுரபீக் உள்பட நான்கு பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தாங்கள் மண்ணுளி பாம்பு வாங்க வந்ததையும், தாங்கள் சுட்டதில் தங்கவேல் காயமடைந்ததையும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதன்பின்னர் அவர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் அந்த காரைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தங்கவேல் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, முகமதுரபீக், விவேக், நித்தின், நித்திஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய கார் டிரைவர் சுபாஷை தேடி வருகின்றனர். போலீசார் கைப்பற்றிய கைதுப்பாக்கி யாருடையது?, அதற்கான லைசென்ஸ் உள்ளதா? அல்லது கள்ள துப்பாக்கியா? என்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் யாருடையது? அதன் பதிவு எண் என்ன என்பது குறித்தும் அறிய கேரளா மாநில போலீசாரிடம் குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story